80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மண்டலத்தில் உள்ள 30 முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து (அன்னதானம்) நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாட்டு நலனுக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து, சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணும் 'பொது விருந்து' (அன்னதானம்) நடைபெறும். அந்த வகையில் நாடு முழுவதும் நாளை 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த விழாக்களில் தமிழக அமைச்சர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை அறநிலையத்துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, வடபழநி முருகன் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பங்கேற்கிறார். அதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட்ராமன், வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல், சென்னையில் உள்ள 30 முக்கிய கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in