

பூந்தமல்லி: பூந்தமல்லியில் மிகப் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள நிலங்கள் தனியார்களின் ஆக்கிரமிப்பிலும், சில இடங்கள் மிக சொற்பமான தொகைக்கு வாடகை, குத்தகைக்கும் விடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி குளக்கரை தெருவில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள, 10 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பூந்தமல்லியைச் சேர்ந்த தனி நபர்கள் வீடுகள், மாட்டுக் கொட்டகை, கடைகள் அமைத்து பயன்படுத்தி வந்தனர்.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலைத் துறை முடிவு செய்தது.
இதன்படி நேற்று கோயில் உதவி ஆணையர் சிவஞானம் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் பாலாஜி, செயல் அலுவலர் சிந்துமதி ஆகியோர் மேற்பார்வையில் பூந்தமல்லி வட்டாட்சியர் நடராஜன், வருவாய்த் துறையினர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் 3 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.