சென்னையில் மின்பழுது காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

சென்னையில் மின்பழுது காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
Updated on: 
1 min read

சென்னை: வண்ணாரப்பேட்டை - ராயபுரம் இடையே ரயில்வே உயர்மட்டப் பாதையில் மின்பழுது ஏற்பட்டதால், இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை கடற்கரை - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்துக்கு இயக்கப்படும் ரயில்களை இணைக்கும் முக்கிய தடமாக வண்ணாரப்பேட்டை - ராயபுரம் தடம் உள்ளது. இத்தடத்ததில் இன்று காலை 5.15 மணிக்கு உயர்மட்ட மின்பாதையில் பழுது ஏற்பட்டது. இதைஅடுத்து, இரு மார்க்கத்திலும் மின்சார, விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, உயர்மட்ட பாதையில் ஏற்பட்ட மின்பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கம் வழியாக செல்லும் ரயில்களின் சேவை தடைப்பட்டன. இதேபோல அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி தடத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால், புறநகர்ப் பகுதிகளில் இருந்து அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், இரண்டரை மணி நேரம் போராடி உயர்மட்ட மின்பாதையில் ஏற்பட்ட மின்பழுதை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை 7.45 மணி முதல் ரயில் சேவை சீரானது. இருப்பினும் காலை முதலே ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னையில் மின்பழுது காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
கர்ப்பிணி பத்திரிகையாளரை தள்ளி விட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in