

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை மாநில பெண்கள் பள்ளியில், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு பணியில் இதுவரை தமிழகத்தில் மொத்தம் ரூ.1,213 கோடி மதிப்பில்லான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. அங்கு குடிநீர், கழிவறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருதால், 500-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ன.
தேர்தல் பணியில் 83,875 போலீஸார், 40,427 அரசுஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம், கட்சியின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை பலத்த பாதுகாப்புடன் நாளை (ஏப்.22) வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, அனைத்து வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்றும், வாகனத்தில் சென்றும், பொதுமக்களை சந்தித்து இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி காலத்தில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: ஏப்.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் தொடர்பான விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி, இணையம், வாட்ஸ்அப், முகநூல் போன்ற வலைதளங்கள் என எந்த வடிவிலான தகவல் தொடர்பு மூலமாகவும் மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் என தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள், பார்களை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.