

மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கொடி நாள் நிதியாக ரூ. 60 லட்சத்துக்கான சொத்துகளின் உயிலை வழங்கிய பி.சுப்பையா. படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 82 வயது முதியவர் பி.சுப்பையா. இவர் நேற்று மதுரைஆட்சியரை சந்தித்து கொடி நாள் நிதிக்கு ரூ.10,000-க்கான காசோலையை வழங்கினார்.
மேலும் தனது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.30 லட்சம் சேமிப்பு, அதற்குரிய வட்டித்தொகை மற்றும் தனது வங்கிக்கணக்கு பெட்டகத்திலுள்ள ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஆகியவற்றையும் கொடி நாள் நிதிக்கு வழங்கும் வகையில் உயில் ஆவணத்தையும் வழங்கினார். அப்போது அரங்கிலிருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
இதுகுறித்து சுப்பையா கூறியது: யாரும் இன்றி வாடகை வீட்டில் வசிக்கிறேன். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கொடிநாள் நிதியாக மொத்தம் ரூ. 60 லட்சத்துக்கான உயிலை வழங்கினேன். ஒவ்வொருவரும் கடைசி காலத்தில் வருவாயில் ஒரு சதவீதத்தையாவது ராணுவத்துக்கு வழங்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.