

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணியால், 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.25 முதல் செப்.7-ம் தேதி வரை சில மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள், சுமார் ரூ.842 கோடி மதிப்பில், பல கட்டங்களாக நடைபெறுகின்றன. இதன் 2-ம் கட்டமாக, புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த ஜூலை முதல் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றன.
முதல் பிரிவில் 1 முதல் 5-வது நடைமேடை வரையிலும், 2-ம் பிரிவில் 6-வது முதல் 11-வது நடைமேடை வரையிலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை பகுதிகளில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக நிலையத்தின் நடுப்பகுதியில் 500 மெட்ரிக் டன் திறன் கொண்ட கிரேன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 6-வது மற்றும் 8-வது நடைமேடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கர்டர் மற்றும் தூண் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், பணிக்காலம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 5 விரைவு ரயில்கள் சேவை மாற்றப்பட்டுள்ளன.
ஆக.20 முதல் ஆக.24-ம் தேதிவரை, தஞ்சாவூர் - சென்னை எழும்பூருக்கு புறப்படும் உழவன் விரைவு ரயில், மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூருக்கு புறப்படும் விரைவு ரயில், கொல்லம் - சென்னை எழும்பூருக்கு புறப்படும் அனந்தபுரி விரைவு ரயில், சேலம் - சென்னை எழும்பூருக்கு புறப்படும் விரைவு ரயில் ஆகிய 4 ரயில்கள் தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
இந்த ரயில்கள் தாம்பரம் - எழும்பூர் வரை இயக்கப்படாது. திருச்சிராப்பள்ளி - எழும்பூருக்கு ஆக.20 முதல் ஆக.24-ம் தேதி வரை புறப்படும் மலைக்கோட்டை விரைவு ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
ஆக.21 முதல் ஆக.25-ம் தேதி வரை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், கொல்லம், திருச்சிக்கு முறையே புறப்பட வேண்டிய உழவன், கொல்லம், மலைக்கோட்டை விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து வெவ்வேறு நேரங்களில் புறப்படும்.
இதுபோல மேற்படிநாட்களில், எழும்பூர் - மங்களூரு சென்ட்ரலுக்கு புறப்படவேண்டிய ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இது குறித்து, தெற்கு ரயில் வே அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே ஆக.20-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ரயில் சேவை மாற்றங்கள் தற்போது ஆக.25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஆக.26-ம் தேதி முதல் ரயில் சேவைகள் பழைய நடைமுறைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புறநகர் ரயில்களின் சேவைகள் ஆக.25 முதல் செப். 7-ம் தேதி வரை இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் தங்களது பயணத்துக்கு முன் மாற்றப்பட்ட ரயில் நேரங்கள் மற்றும் சேவை விவரங்களை சரிபார்த்து, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.