சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி  சுவாமி தரிசனம்
Updated on
1 min read

சேலம்: தைப்பூசத் திருநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிலுவம்பாளையத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தைப்பூச திருவிழாவை ஒட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தைப்பூச திருநாளை ஒட்டி இக்கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக, காவிரி கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்துக் கொணடு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், சாமிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, பக்தர்கள் அரோகரா, அரோகரா என முழக்கமிட்டனர். தொடர்ந்து, பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை ஒட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி மக்களோடு மக்களாக அமர்ந்து அன்னதானம் உண்டு மகிழ்ந்தார். பின்னர், மக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில், ‘தைப்பூசத் திருநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 1), சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த தமது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜையில், கிராம மக்களுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தைப்பூசத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள். அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால், "வேலுண்டு வினையில்லை" என்பதற்கு ஏற்ப வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் , இந்த தைப்பூசம் திருநாள்.

வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாழ்வு மலரட்டும். வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும். தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான , அதிமுக அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி  சுவாமி தரிசனம்
‘‘வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம்’’ - மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in