எஸ்எஸ்ஐ செந்தில்குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: “படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.40 லட்சம் நிதி உதவி போதுமானது இல்லை. ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்துக்கு இணையாக ​தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது.

​தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. ‘ரோட்டில் நின்றால் கொலை; தட்டிக்கேட்டால் படுகொலை’ என்னும் அளவுக்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவுக்கு நாட்டின் சட்டம் - ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.

இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொது மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?’

அதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல் துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.

அரசியல் என்பது சினிமா செட் இல்லை; முதல்வர் நாற்காலி என்பது 'பஞ்ச் டயலாக்' பேசுவதற்கான மேடையும் இல்லை என்பதை இந்த 'ரீல்' முதல்வர் இப்போது புரிந்துகொள்வார்?

படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.40 லட்சம் நிதி உதவி போதுமானது இல்லை.

அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்.

இந்த அரசும், 2026 அக்டோபர் 14 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.

தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த வகையில், செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதறவைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்</p></div>
தேனி எஸ்எஸ்ஐ செந்தில்குமாரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் விஜய் உத்தரவு

X