

சென்னை: அடாவடி செயல்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது போல், ஆளும் கட்சியினரும், சமூக விரோதிகளும் பேயாட்டம் போடுகின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஆளும்கட்சியை சார்ந்தவர்களும், சமூக விரோதிகளும் தங்களின் அடாவடி செயலுக்கு லைசென்ஸ் கிடைத்ததுபோல், பேயாட்டம் போட்டு வருகிறார்கள். தங்களைகேள்வி கேட்பதற்கோ, தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற மமதையோடு செயல்பட்டு வருகின்றனர். உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய அளவுக்கே ஒப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், பிப்.22-ம் தேதி ஓசூரில் அரசு ஊழியர் சிவமூர்த்தியை, காரை ஏற்றிக் கொன்றதாக அறியப்படும் ஆதித்யாவின் தந்தை சீனிவாசன் திமுகவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆவார். பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், பட்டியலினத்தைச் சேர்ந்த மாண வியைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்லி கொடுமைப்படுத்திய வழக்கு, மணச்சநல்லூர் எம்எல்ஏ கிட்னி முறைகேடு வழக்கு என பல உள்ளன.
பெண்களுக்கு பாதுகாப்பு தரத் தவறிய சுய தம்பட்டம் அடித்து விளம்பரத்தை மட்டுமே நம்பியுள்ள, துறைதோறும் லஞ்சம் பெருக்கி, கஜானாவை சூறையாடிய, ஒரு குடும்பம் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக ஆட்சியின் தோல்விகளை அடுக்கலாம். தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம் என்று சொல்லி விட்டு,2ஜி ஊழல் முதல் டாஸ்மாக்,போலி மதுபான பார்கள், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நியமன ஊழல், கனிமவளக் கொள்ளை போன்ற எண்ணற்ற ஊழல்களை செய்து, மக்களின் தலையை தொங்கவிட்ட முதல்வர் ஸ்டாலினின் தீய திமுக அரசு இனி தொடரக்கூடாது.
திமுக ஆட்சியின் தோல்விகளை மடைமாற்ற தமிழகத்துக்கும், டெல்லிக்கும் தான் போர் என்று முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசி வருகிறார். இவரதுஅமைச்சர்கள் மீது நடக்கும் லஞ்ச வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்கு ஓடிக்கொண்டிருக்கும் நிலையை மாற்ற தினமும் ஒரு சவால் விடுகிறார்.
தமிழகத்தை புதைகுழியில்தள்ளியுள்ள ஸ்டாலினுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.