

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வராக இருந்த போது, சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடி வந்தார். பின்னர், ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தின் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து மக்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகிறார்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மேட்டூர் தொகுதியில் கிராம மக்களுடன் பண்டிகையை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பழனிசாமி கலந்து கொள்ளும் பொங்கல் விழாவை முக்கியத்துவம் பெறும் வகையில் கொண்டாட சேலம் மாவட்ட அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொளத்தூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலான மேட்டூர் தொகுதி நிர்வாகிகள் கிராமத்தை தேர்வு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கோனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பிரம்மாண்டமாக 108 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழனிசாமியை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரவும், கலை நிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கொளத்தூரில் தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும், நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேட்டூர் தொகுதி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்கி உள்ளனர்.