ஆதாயம் தேடி அவதாரம் எடுக்கும் புதுக் கட்சிகள்: அதற்கும் அணை போட்ட தேர்தல் ஆணையம்

ஆதாயம் தேடி அவதாரம் எடுக்கும் புதுக் கட்சிகள்: அதற்கும் அணை போட்ட தேர்தல் ஆணையம்
Updated on
2 min read

தேர்தல் வந்துவிட்டாலே புதுப் புதுக் கட்சிகள் பூத்துக் குலுங்குவது நாடு முழுவதுமே நடக்கும் சமாச்சாரம் தான். இப்படிப் புறப்படும் கட்சிகளில் பெரும்பாலானவை தேர்தலில் போட்டியிடுவதைக் காட்டிலும் தங்களுக்கான ‘பலன்களை’ குறுக்கு வழியில் அறுவடை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆனால், இவர்களில் இந்த ‘தந்திரத்தைத்’ தெரிந்து கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் இப்போது கிடுக்கிப் பிடி போட்டுவிட்டது.

லெட்டர் பேடு கட்சிகளின் ‘லட்சியங்களுக்கு’ வேட்டு வைக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய கட்சிகளை பதிவு செய்வதில் விதிகளை கடுமையாக்கி விட்டது. அதனால், கடந்த இரண்டு வருடங்களில் ஒரு சிலரால் மட்டுமே புதிதாக கட்சி தொடங்க முடிந்திருக்கிறது. மற்ற மனுக்களை எல்லாம் காரணமே சொல்லாமல் கிடப்பில் தள்ளிவிட்டது ஆணையம்.

தேர்தல் திருவிழாவுக்காகவே புதிதாக கட்சிகளைத் தொடங்குவோரில் பலரும், தேர்தலில் போட்டியிடுவதை ரெண்டாம் பட்சமாக வைத்துவிட்டு, வேறு சில வழிகளில் ‘ஆதாயம்’பார்ப்பதையே பிரதானமாக வைத்திருக்கிறார்கள். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பெயரில் தாங்களும் வேட்பாளர்களை நிறுத்திப் பேரம் பேசுவது, குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை பிரிப்போம் என முக்கிய வேட்பாளர்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தி அதன் மூலம் ‘கல்லா கட்டுவது’, வாக்குப் பதிவு நாளில், பிரதானக் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு துணையாக தங்கள் ஏஜென்ட்களை உள்ளே அனுப்பி ‘செலவு தொகைக்கு’ பணம் வாங்கிக் கொள்வது என பல வகைகளில் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள்.

இதில்லாமல், இப்போது விருப்ப மனு வாங்குவது அனைத்துக் கட்சிகளிலும் ‘ஃபேஷன் ஷோ ' ஆகிவிட்டதால் அதை வைத்தும் வசூல் வேட்டை நடத்துகிறார்கள் புதிதாக கட்சி தொடங்குபவர்கள். கர்நாடகாவில் தேசிய கட்சி ஒன்றில் இருந்த தலைவர் ஒருவரின் பேரன் புதிய கட்சி தொடங்கி அங்குள்ள மாநகராட்சிகளின் தேர்தலில் போட்டியிடத் தயாராகிறார். தனது கட்சியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் தலா ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு விருப்ப மனுவை அளித்து வருகிறார் அந்தப் பேரன். இதுவரை அங்குள்ள சுமார் 600 வார்டுகளுக்கு சுமார் ஆறாயிரம் வேட்பு மனுக்கள் ‘விற்றுத்’ தீர்ந்திருப்பதாகச் விவரிக்கிறார்கள். அப்படியானால் மொத்த வரும்படியைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

முக்கிய கட்சிகளிடம் பேரம் பேசி புதிதாக முளைக்கும் கட்சிகளுக்கு ‘வேண்டியதை’ வாங்கிக் கொடுப்பதற்காக டெல்லி வரைக்கும் தரகர்களும் இருக்கிறார்கள். டெல்லியில் இருக்கும் அவர்களில் சிலர் நம்மிடம் பேசுகையில், “இப்போதெல்லாம் ஒற்றை இலக்கத்தில் கூட வெற்றி வித்தியாசங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. அதனால், 10 ஓட்டு பிரிவதைக் கூட பிரதானக் கட்சிகள் பெரிதாக நினைக்கின்றன. இதனால் புதிய கட்சிகள் உள்ளே வந்து தேவையில்லாமல் ஓட்டைப் பிரிப்பதை தடுக்க பெரிய கட்சிகள் ஆளுக்கு தகுந்தாற் போல் பேரம் பேசுகின்றன.

இன்னும் சிலர், கடைசி நேரத்தில் கட்சி துவங்க முடியாதவர்களுக்கு தங்களது கட்சியை ‘தானமாக’ தந்தும் காசு பார்க்கிறார்கள். தற்சமயம், தமிழகத்தில் பிளவுபட்டுள்ள ஒரு முக்கியக் கட்சியின் ஒரு பிரிவானது இப்படித்தான் ஒரு கட்சியை ‘இரவல்’ வாங்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.

இதேபோல், சில கட்சிகள் கூட்டணி தலைமையின் வற்புறுத்தலால் தங்கள் சின்னத்தில் போட்டியிடாமல் வேறு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதையும் முடிவுக்குக் கொண்டுவரவே நாடு முழுவதும் சுமார் 800 கட்சிகளின் பதிவை அண்மையில் ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம். இத்தகைய ‘கோல்மால்’களை தடுக்கவே புதிய கட்சிகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையம் விதிகளை கடுமையாக்கி செக் வைத்து விட்டது” என்றனர்.

புதிதாக கட்சிகளை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்பவர்கள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து அதன் பிறகே அந்த விண்ணப்பங்களைக் ஏற்றுக் கொள்ளும்.

ஆனால்,இதற்கானகால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால். ‘பரிசீலனை’ என்ற பெயரிலேயே ஏகப்பட்ட மனுக்களை கிடப்பில் வைத்திருக்கிறது ஆணையம். இது தொடர்பாக சிலர் தேர்தல் ஆணையத்தின் மீது வழக்குகளும் தொடர்ந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும், லெட்டர் பேடு கட்சிகளின் வருகைக்கு தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் இந்த தற்காலிக ‘ஸ்பீடு பிரேக்’கால் பிரதானக் கட்சிகள் இனி, ‘அப்பாடா...’ என நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

ஆதாயம் தேடி அவதாரம் எடுக்கும் புதுக் கட்சிகள்: அதற்கும் அணை போட்ட தேர்தல் ஆணையம்
அதிமுகவிடம் 59 சீட் கேட்க திட்டம்: பாஜக மேலிட தலைவர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in