

உமதுரை: மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடத்தி வந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 9 முதல் வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்யும் முறை நிறுத்தப்பட்டு, இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் இ-ஃபைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது. அதுவரை இ-ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். நேரடியாக மனுத் தாக்கல் செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர்கள் கடந்த ஒரு மாதமாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
தலைமை நீதிபதியை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து இ-ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்க மனு அளித்தனர். பின்னர் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதில், இ-ஃபைலிங் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வழக்கமான முறையில் நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அனுமதி மறுக்கக் கூடாது. இந்த சிக்கல்கள் தீரும் வரை இரண்டு முறையிலும் வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து பொங்கலுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒத்திவைத்தது. இந்நிலையில் கீழமை நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-ஃபைலிங் முறையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக உயர் நீதிமன்றம் பதிவாளர் ஜெனரல் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த ஒரு மாதமாக வழக்கறிஞர்கள் நடத்தி வந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் மோகன்குமார் கூறுகையில், கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கறிஞர்கள் சங்க சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 9 முதல் பணிக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.