லஞ்ச ஒழிப்புத் துறை புதிய மனு: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சிக்கல்?

வைத்திலிங்கம் | கோப்புப்படம்
வைத்திலிங்கம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான லஞ்ச வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற அனுமதிக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு, இந்தப் புகாரின் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் திமுக-வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறப்போர் இயக்கம், அமலாக்கத் துறை தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாகக் கூறி மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, வழக்கை முடித்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வைத்திலிங்கம் தரப்பில், இந்த வழக்கிற்கும் அமலாக்கத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமலாக்கத் துறையின் மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்த நீதிபதி, அனைத்து மனுக்களின் மீதான விசாரணையை ஜூன் மாதம் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வைத்திலிங்கம் | கோப்புப்படம்
மேட்டூர் நீர் திறக்காமல் ரூ.134 கோடிக்கு ‘சிறப்பு தொகுப்பு’ என ஏமாற்றுவதா? - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in