தி.மலையில் திமுக எம்.பி வீட்டில் லஞ்ச ஓழிப்புத் துறை போலீஸார் 8 மணி நேரம் சோதனை

தி.மலையில் திமுக எம்.பி வீட்டில் லஞ்ச ஓழிப்புத் துறை போலீஸார் 8 மணி நேரம் சோதனை
Updated on: 
2 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 8 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் தென்றல் நகர் பகுதியில் உள்ள திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் நேற்று காலை 7 மணி அளவில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் ஆய்வாளர்கள் மைதிலி மற்றும் அருள் பிரசாத் உட்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினராக பதிவி வகித்து வருகிறார். திமுக ஆட்சியில் குடும்ப உறுப்பினர் மூலம் ஏபியு கண்ஸ்டரக்‌ஷன் (APU CONSTRUCTION ) என்ற பெயரில் அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார்.

இதன் மூலம் பல கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை செய்து வருவதால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது மற்றும் திருவண்ணாமலை அடுத்த மலப்பம்பாடி ஏரியில் மண் அள்ளப்பட்டதில் இவருக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் மாலை 3 மணி சுமார் வரை 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரிடம் கேட்டபோது பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

<div class="paragraphs"><p>திமுக மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை</p></div>

திமுக மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை

இதனிடையே, சோதனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, “அதிகாரிகள் இளைஞர் அணி மாநாடு குறித்து பேச வேண்டும் என்றார்கள். கடந்த ஆட்சியில் வடக்கு மண்டல திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் மாதம் நடந்தது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் அதில் கலந்து கொண்டனர். அந்த மாநாடு குறித்து கேள்வி எழுப்பினர். அனைத்து துறைகளிடமும், முறையாக அனுமதி பெற்று தான் மாநாடு நடத்தப்பட்டது என்று கூறினேன்.

பிறகு எனது ஒரு உறவினர்கள் நடத்தும் எபியு கட்டுமான நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தினர் . அந்நிறுவனமும் முறையாக அனுமதி பெற்று தான் நடத்தப்படுகிறது. அது தொடர்பான ஆவணங்களை கேட்டார்கள். இடைத்தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் உள்நோக்கத்துடன் இந்த சோதனை நடந்துள்ளது. என்னை தேர்தலுக்கு செல்ல விடாமல் தடுப்பது தான் இதன் முக்கிய நோக்கம். அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு முறையான பதில் அளித்துள்ளோம். அவர்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு லஞ்சமும் இல்லை, ஊழலும் இல்லை. இங்கு வந்தது லஞ்ச ஒழிப்பு துறைதான். பொய் வழக்குக்காக வந்தனர். சரியான ஆதாரம் அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை முடக்குவதற்காக இந்த சோதனை நடந்தது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கவில்லை. அரசின் விதிகளுக்கு உட்பட்டு தான் அனைத்து பணிகளும் நடந்தது” என்று மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கூறினார்.

தி.மலையில் திமுக எம்.பி வீட்டில் லஞ்ச ஓழிப்புத் துறை போலீஸார் 8 மணி நேரம் சோதனை
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.1 வரை மிதமான மழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in