

படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர்: தமிழகத்தின் ஒப்புதலின்றி காவிரியில் ஒரு பக்கெட் தண்ணீரைக்கூட கர்நாடக அரசால் நிறுத்த முடியாது என திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கர்நாடக முதல்வர் சிவக்குமார், அவர் அமைச்சரானதில் இருந்தே மேகேதாட்டு அணை விவகாரத்தை பேசி வருகிறார். இரு மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளில் எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக அணையைக் கட்டுவது, நீரைத் தேக்கி வைப்பது என்பது முடியாத காரியம். எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறு ஓடுகிறதோ அங்கெல்லாம் பிரச்சினைதான்.
முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்சினை இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்துவது, கூடுதல் அணை கட்டுவது குறித்து கேரள மாநிலத்தால் முடிவெடுக்க முடியாது. அது நம்மைச் சார்ந்த ஒரு பிரச்சினை. அதே போன்றுதான் காவிரியும். காவிரியில் நாங்கள் அணை கட்டுவோம் என்று அவர்கள் கூறுவதே அபத்தம். அதற்கு வாய்ப்பிருந்தால் இந்நேரம் கட்டியிருப்பார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை.
தமிழகத்தின் ஒப்புதலின்றி காவிரியில் ஒரு பக்கெட் தண்ணீரைக்கூட கர்நாடக அரசால் நிறுத்த முடியாது. எப்படியாவது ஒப்புதல் வாங்க வேண்டும் என்றுதான் அவர்களும் நினைக்கிறார்கள். நீதிபதி சொன்னால்கூட அணையைக் கட்ட முடியாது.
ஏற்கெனவே, ஒருமுறை நம்மைக் கேட்காமல் மத்திய அரசு அனுமதி கொடுத்ததாகக் கூறி வனத்துறைக்கு ஒரு பைல் அனுப்பினார்கள். அவர்கள் அனுமதி கொடுக்க முடியாது என திருப்பி அனுப்பி விட்டார்கள். தடைக்கற்களைத் தாண்டுவது என்பது சுலபம் அல்ல. கர்நாடக முதல்வர் ஆர்வத்தின் காரணமாகச் சொல்கிறாரே தவிர, அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை கேட்டுள்ளாரே என கேள்வி எழுப்பியபோது, “ஆளுநரிடம் தானே கேட்டார்கள். என்னிடம் இல்லையே” என்றார் துரைமுருகன்.