

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட டம்மி ‘ஏ.கே.47’ துப்பாக்கிகள்.
சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னை, தி.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அசோக்நகர் 2-வது அவென்யூவில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் 10 இருந்தன. இதைக் கண்டு அதிர்ந்த பறக்கும்படை அதிகாரிகள், துப்பாக்கிகளை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் டம்மி துப்பாக்கிகள் என்பது தெரியவந்தது. அதன் பிறகே அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
இதையடுத்து, அனைத்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து வேன் ஓட்டுநர் மகேந்திரனை அசோக்நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், அவை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் பயன்படுத்தியதும், படப்பிடிப்பு முடிந்ததால், வடபழனியில் உள்ள கடையில் ஒப்படைக்க கொண்டு சென்றதும் தெரிந்தது.
மேலும், துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் அதனை ஆய்வு செய்து மீண்டும் வேன் ஓட்டுநர் மகேந்திரனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.