

உள்படம்: சண்முகசுந்தரம்
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படைக் காவலர்கள் தாக்கப் பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படைக் காவலர்கள் 6 பேரை சிபிஐ கைது செய்தது.
கூடுதல் குற்றப் பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
பின்னர், சண்முகசுந்தரம் உட்பட 4 பேரும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தர விடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை.
இதையடுத்து, டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து, அவரைக் கைது செய்து மார்ச் 5-ல் ஆஜர்படுத்த சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமைத் குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வபாண்டி முன்னிலையில் நேற்று ஆஜராகி, பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, பிடிவாரன்ட்டை ரத்து செய்து, மார்ச் 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.