வளசரவாக்கத்தில் குடிநீர் தரமாக உள்ளது: சென்னை குடிநீர் வாரியம் விளக்கம்

வளசரவாக்கத்தில் குடிநீர் தரமாக உள்ளது: சென்னை குடிநீர் வாரியம் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: வளசரவாக்கம் மண்டலத்தில் சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீர் தரமாக இருப்பதாக அவ்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிமன்ற கூட்டம் கடந்த ஆக.28-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய வளசரவாக்கம் மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், வளசரவாக்கம் மண்டலத்தில் குடிநீரில் மலம் கலந்து வருகிறது. 46 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டன.

அதில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் வாரிய குடிநீரில், இ.கோலி பாக்டீரியா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவிலேயே முதல்வரின் கீழ் உள்ள துறை இவ்வளவு மோசமாக இருந்த தில்லை. எனவே மாநகரம் முழுவதும் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் அளித்த விளக்கம்: குடிநீரின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானதும், தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடியது. சென்னை மாநகரில் பொது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய, குடிநீர் விநியோகத்தின் போது முறையாக களப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சுமார் 900 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய ஆய்வகத்தில் விரிவான தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. குடிநீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மாமன்றக் கூட்டத்தில் குடிநீர் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட தெருக்களில் நேற்று முன்தினம் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகளில், குடிநீர் மாசுபாடு அல்லது கழிவுநீர் கலப்பு தொடர்பான எந்தவித குறைபாடும் கண்டறியப்படவில்லை. பொது மக்களிடமிருந்து குடிநீர் மாசுபாடு அல்லது குடிநீரின் தரம் தொடர்பாக இதுவரை எவ்வித புகாரும் வாரியத்தால் பெறப்படவில்லை.

சென்னை மாநகர மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் வழங்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 044- 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

வளசரவாக்கத்தில் குடிநீர் தரமாக உள்ளது: சென்னை குடிநீர் வாரியம் விளக்கம்
மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து: தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in