

திமுக எம்எல்ஏ எழிலன் | கோப்புப் படம்
சென்னை: ”தேர்தல் கூட்டணிகள் அமைக்கும் போது கருத்துவேறுபாடுகள் வரும். அதுதான் ஜனநாயகம். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு கூட்டணியை வழிநடத்தும் கட்சி திமுக. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மாநில உரிமைகளுக்கானது. இதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம்,” என்று திமுக எம்எல்ஏ எழிலன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மாநில உரிமைகளுக்கானது. தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை யார் பாதுகாப்பது என்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. மதவாத சக்திகளுக்கும், மக்கள் பக்கம் இருக்கும் ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது.
தேர்தலை எதிர்கொள்ள கடந்த ஓராண்டாகவே திமுக தயாராகி வருகிறது. மற்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் மூலம் எவ்வளவு குழப்பம் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் திமுக அரசு எஸ்ஐஆர்-ஐ விரைந்து முடிக்க உதவியது. எங்களைப் பொருத்த வரை திமுக தேர்தலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது.
எனவே வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் 2.o அரசு அமைக்கப் போவது உறுதி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது பெயரல்ல மந்திர வார்த்தை அதனை மீண்டும் சட்டப்பேரவையில் மக்கள் ஒலிக்கச் செய்வார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை குறிப்பாக முன்கூட்டியே, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு போன்றவற்றை மக்கள் கண்டுகொள்ளவில்லை. கடந்த (2011- 2021) 10 ஆண்டுகளாக அதிமுகவின் அவல ஆட்சியை கண்டே 2021-ம் ஆண்டு அதை அகற்றி திமுக ஆட்சி இடம் பெறச் செய்தனர். கடந்த 2021-ம் ஆண்டே அதிமுக டபுள் இன்ஜின் சர்காரில் தான் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. தமிழ்நாட்டை பொருத்தவரை திராவிட இன்ஜின் தான் செல்லுபடியாகும்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் எடப்பாடி பழனிசாமி 10 தேர்தல்களில் தொடர் தோல்வியை தழுவியுள்ளார். ஏன் என்றால் அவரின் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்கிறது. உரிமைத் தொகை திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி இப்போது கூடுதலாக உரிமைத் தொகை கொடுகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்.
கோடை காலத்திற்கு கொடுத்த ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை தற்போது ஈரான் போர் பதற்றம் சூழ்நிலையில் பெரிதும் உதவுவதாக மக்கள் சொல்கின்றனர். மக்களுக்காக என்றும் பணியாற்றும் அரசு திராவிட மாடல் அரசு. கூட்டணிக் கட்சிகள் அனைவரும் சுமுகமாக ஒத்துழைப்பு அளிப்பதாலேயே முதல்வர் கட்டமைக்கும் கூட்டணிக்குள் சுமுகமாக தொகுதிகள் ஒதுக்கப்படுகிறன. காங்கிரஸ், தேமுதிக, விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைவருடனான முழுமையான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தேர்தல் கூட்டணிகள் அமைக்கும் போது கருத்து வேறுபாடுகள் வரும். அதுதான் ஜனநாயகம். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு கூட்டணியை வழிநடத்தும் கட்சி திமுக.” என்றார்.
கடந்த 15 நாட்களாக கூட்டணிக் கட்சியினர் பலர் தங்கள் மன வருத்தங்களை பதிவு செய்து வருவது குறித்து, பேசிய திமுக எம்எல்ஏ எழிலன், “கூட்டணி கட்சிகள் இடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். விரும்பிய தொகுதிகள் கிடைக்காமல் போகலாம். ஆனால் தேர்தல் களத்தை பொருத்த வரை வெற்றி தான் முக்கியம்.
யார் 117 இடங்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதேபோல், கூட்டணி தர்மமும் அடிப்படை. கூட்டணி உறுப்பினர்களும் வெற்றி பெற திமுக உறுப்பினர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்கள் எந்த வகையிலும் கூட்டணிக்கு குறுக்கீடாக இருக்காது. கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் இல்லை.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது தமிழ்நாட்டில் சமூக பொருளாதாரத்தை திருப்பிப் போடும் அளவுக்கான தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது. அதனால் திமுக தேர்தல் அறிக்கை மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பிறகு திமுக தேர்தல் அறிக்கை என்பது வெளியிடப்படும். அது எங்களுக்கு தேர்தல் களத்தில் பெருவாரியான இடங்களில் வெற்றியைப் பெற்றுத் தரும்.
2021-ம் ஆண்டு ஆட்சியில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக திராவிட மாடல் அரசு. ஒரு சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விதிகள் ஒத்துழைக்கவில்லை என்பதால் மட்டுமே நிறைவேற்றாமல் உள்ளது. அதனால் திமுகவை பொருத்த வரை சொன்னதைச் செய்யும், அதற்கும் மேலும் முற்போக்கு திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றும். இதுதான் மக்களுக்கும் திமுகவுக்கான உறவு.” என்று எம்எல்ஏ எழிலன் கூறினார்.