

ராமேசுவரத்தில் கலாம் நினைவிடத்தில் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்ட அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர். படம்: எல். பாலச்சந்தர்
ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 11-வது நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 11-வது ஆண்டு நினைவுநாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு கலாமின் நினைவிடத்தில் நேற்று காலை அவரது அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீராமற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.
இதில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஜமால் சித்திகீ, ராமேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது நாசர் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பொது மக்கள்,மாணவ, மாணவிகள், ராமேசுவரம் வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்களும் கலாம் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.