

மதுரை: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத இறைச்சிக் கூடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. செயல்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை நிபந்தனைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் இறைச்சிக் கூடம் அமைக்க தடை கோரி தென் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இறைச்சிக் கூடங்கள் அமைக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடையநல்லூர் நகராட்சி ஆணையர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தண்டபானி, திலிப்குமார் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இறைச்சிக் கூடங்கள் அமைப்பது தொடர்பாக மற்றும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஒரே மாதிரியான திட்டம் இல்லை என்பது தெரிகிறது.
பல உள்ளாட்சி அமைப்புகளில் இறைச்சிக் கூடங்கள் செயல்பட்டு வந்தாலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் அமைக்கவும், அங்கு சேரும் கழிவுகளை அகற்றுவது தொடர்பான நிலையான நடைமுறை இல்லை.
உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், இறைச்சிக் கூடங்களை முறையாக ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல் மற்றும் நிர்வகிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களின் செயல்பாடு மற்றும் அங்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்புப் பணி தொடர்பாகவும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், குறிப்பாக பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இறைச்சிக் கூடங்கள் அமைத்தல், அவற்றின் செயல்பாடு மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பாக ஒரே மாதிரியான திட்டம் தேவை.
இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், “மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இறைச்சிக் கூடங்களை அமைத்தல், இயக்குதல், கழிவு மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான ஒரே மாதிரியான கட்டமைப்பு உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று இறைச்சிக் கூடங்களை இயக்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளுக்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக் கூடங்கள் சட்டப்படியும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்கிறது.
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். அதுவரை அறிக்கையில் கூறியுள்ள நிபந்தனைகள்படி அமைக்கப்படாத புதிய இறைச்சிக் கூடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மாநிலம் முழுவதும் தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் நிபந்தனை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனு முடிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.