

கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
சென்னை: திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 62 மையங்களில் நாளை (4-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கடந்த 2 தினங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அர்களிடம் வெற்றி வாய்ப்பு, தொகுதி நிலவரம் குறித்து கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கை நாளில் கவனமாக செயல்படவும் உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் டி.ஆர்பி.ராஜா, எம்பி ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறும்போது, “திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. கருத்துக்கணிப்புகளை தாண்டி இன்னும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். அப்படிப்பட்ட நிலவரங்களைதான் களத்தில் நாங்கள் பார்த்தோம்.
அதிமுக பலவீனமாக இருப்பதால் அந்த வாக்குகள் தவெகவுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவை விரும்பாதவர்களும் உள்ளனர். அவர்களும்கூட தவெகவுக்கு வாக்கு அளித்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.