

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக-வில் விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது. விநியோகம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் மனுக்களைப் பெற்றுச் சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்று முதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தலைமை அறிவித்திருந்தது. இதற்காக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விண்ணப்பக் கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000, மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ. 15,000 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து அதிகாலையிலேயே அண்ணா அறிவாலயத்தில் குவிந்த நிர்வாகிகள், தங்கள் விருப்பத் தொகுதிகளுக்கு மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர்.
விருப்ப மனு விநியோகத்தின் தொடக்கத்திலேயே முக்கிய நகர்வாக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு சார்பில் முதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினும் மீண்டும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, அவர்களுக்காக விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து வழங்கப்பட்டது.