நகராட்சி நிர்வாக லஞ்ச விவகாரம்: வழக்குப் பதியப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Updated on
1 min read

சென்னை: முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன. இந்த அனைத்து வழக்குகளும் ஜூன் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் முறையீடு செய்தார்.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் விசாரணை இம்மாத இறுதியில் விசாரணைக்கு உள்ள நிலையிலும், அடுத்த விசாரணை வரை எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்த நிலையில் எப்படி வழக்குப்ப திவு செய்ய முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதிமன்றம்</p></div>
‘நீட் தேர்வை மீண்டும் எழுதும் துணிவு இல்லை’ - உயிரை மாய்த்துக் கொண்ட ம.பி. மாணவி கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in