கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று தொடங்கும் திமுக

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று தொடங்கும் திமுக
Updated on
1 min read

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று(பிப்ரவரி 22) முதல் தொடங்குகிறது. வழக்கம்போல் முஸ்லீம் லீக் கட்சிக்கு முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக குழு அமைப்பு: தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுக நேற்று அறிவித்தது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்’’என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று (பிப்ரவரி 22) முதல் தொடங்குகிறது. திமுகவின் மரபின்படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு முதல் அழைப்பு தரப்பட்டுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளும் அடுத்தடுத்த நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட உள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட முஸ்லீம் லீக், அனைத்திலும் தோற்றது. அதனால் இந்த முறை அந்த கட்சிக்கு 2 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுத்துவருகின்றன. தேமுதிகவும் புதிதாக கூட்டணியில் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டை சலசலப்பு இல்லாமல் முடிப்பதற்கான பணிகளையும் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாகவும் திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னதாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிப். 22-ம் தேதி தொடங்கப்படும் என்று திமுக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிமுக குழு அமைப்பு: இதற்கிடையே, மதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், உயர்நிலைக் குழு உறுப்பினர் சு.ஜீவன், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in