

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ரூ.197 கோடி, அதிமுக ரூ.112 கோடி, நாம் தமிழர் ரூ.1.37 கோடி செலவுகள் மேற்கொண்டுள்ளதாக அந்தந்த கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தங்கள் தேர்தல் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவேண்டும்.
அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் செலவீன பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளன. அதிகபட்சமாக திமுக ரூ.197 கோடியும், அதிமுக ரூ.112 கோடியும் செலவு மேற்கொண்டுள்ளன.
திமுக
திமுக தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக திமுகவிடம் ரூ.365 கோடி கையிருப்பு இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் மூலம் ரூ.126 கோடி வசூலாகியுள்ளது.
மீதம் ரூ.319.39 கோடி நிதி
இந்தத் தேர்தலில் திமுக மொத்தமாக ரூ.197.84 கோடியைச் செலவிட்டுள்ளது. இதில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.70 கோடியைச் செலவிட்டுள்ளது.
மேலும், தனது கட்சி வேட்பாளர்கள் பலருக்கு தேர்தல் நிதியாக தலா ரூ.25 லட்சத்தை வங்கிக்கணக்கு மூலமாக திமுக தலைமை வழங்கியுள்ளது. செலவுகள் போக, திமுகவிடம் மீதம் ரூ.319.39 கோடி நிதியுள்ளது.
குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரூ.2.66 கோடியும், எம்பி கமல்ஹாசனுக்கு ரூ.3.24 கோடியும் பிரச்சாரத்துக்காக திமுக செலவிட்டுள்ளது. மேலும்,ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ‘பென்’ நிறுவனத்துக்கு ரூ.6.61 கோடி வழங்கியுள்ளது.
அதிமுக
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான அக்கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.112.39 கோடியாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கட்சியின் கையிருப்பாக ரூ.313 கோடி இருந்துள்ளது.
தேர்தல் காலத்தில் ரூ.87.41 கோடி புதிய வரவாகக் கிடைத்துள்ளது. அதிமுகவின் மொத்த செலவான ரூ.112 கோடியில், ரூ.103 கோடியை ‘பிரமான்யா ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங்’ என்ற ஒரே நிறுவனத்திடம் விளம்பரங்களுக்காக அதிமுக வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் அதிமுகவின் வங்கிக்கணக்கில் ரூ.295 கோடி மீதமுள்ளது.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி குறைந்தளவிலேயே செலவு செய்துள்ளது. அக்கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் தொடங்கும் போது கட்சியின் கணக்கில் வெறும் ரூ.19 லட்சம் மட்டுமே இருந்துள்ளது. தேர்தல் சமயத்தில் ரூ.2.20 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது.
வேட்பாளர்களுக்கு ரூ.44 லட்சம்
தேர்தலில் அக்கட்சியின் மொத்த செலவு ரூ.1.37 கோடியாகும். இதில் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களுக்காக ரூ.93 லட்சமும், வேட்பாளர்களுக்கான செலவுக்காக ரூ.44 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் ரூ. 20,000 முதல் அதிகபட்சமாக சீமான் உள்ளிட்டோருக்கு ரூ.5 லட்சம் வரையும் தலைமை நிதி வழங்கியுள்ளது.
ரூ.64 லட்சம் மீதம்
தேர்தல் முடிந்தபிறகு அக்கட்சியின் வசம் ரூ.64 லட்சம் மீதமுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இந்த ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஆளும் கட்சியான தவெகவின் தேர்தல் கணக்கு இன்னும் வெளியிடப்படவில்லை.