

சென்னை: “பழநியில் மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் பழநிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி . தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது தவெக. முதல்வர் விஜய் ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை” என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தாமன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பழநி கோயில் நில மோசடி விவகாரத்தில், பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து ஆளைக் கூட்டி வந்து பத்திரப்பதிவு செய்கிறார்கள், என்றால், ஏற்கெனவே இந்த அரசு ஆளை ஃபிக்ஸ் செய்திருக்கிறது.
நில மோசடி தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், ‘அறியாமை காரணமாக அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்துவிட்டனர்’ என்கிறார். விசாரணை தொடங்குவதற்கு முன்பே அமைச்சர் இவ்வாறு கூறுவது, குற்றவாளியை காப்பாற்றுவதற்கு அவர் துணை போவதையே காட்டுகிறது. அமைச்சர் குற்றவளியை காப்பாற்றுகிறார் என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு.
நில மோசடி விவகாரத்தில் கிரயம் செய்திருக்கக்கூடிய 2 பேர் யாரென்று போலீஸ் தரப்பில் வெளிக்காட்டவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சொத்து வாங்கக்கூடிய அளவிற்குக் கூட பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி ரூ.2 கோடியில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்?
சமூக வலைதளங்களில் இந்த அரசையும், அரசு செய்யக்கூடிய குற்றங்களையும், முதல்வரையும் விமர்சித்தால், இரவோடு இரவாக கைது செய்கிறது போலீஸ்.
ஆனால் பழநி கோயில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய துணை சார்பதிவாளரை இன்னும் ஏன் தவெக போலீஸ் கைது செய்யவில்லை?. இங்கே இருக்கக்கூடிய அமலாக்கத் துறை எங்கே? எஃப்ஐஆரில் இடம்பெற்றுள்ள 4 பேரில் ஒருவர் கூட இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை?
பழநி கோயில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய நிலமும், கோயில்களும், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாக்கப்பட்டன. பழநிக்கு மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் பழநிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி. தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது தவெக.
அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு இவர்களாகவே முன்வந்து பேட்டியளிக்கின்றனர். அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், ‘அறியாமை’ காரணம் என்கிறார். பத்திரப் பதிவுதுறை அமைச்சர் ஒரு மாதிரியும், அரசு தரப்பு வழக்கறிஞர் அதை மாற்றியும் பேச வேண்டியதன் அவசியம் என்ன? இந்த சதிக்கு பின்னால் இருப்பது யார்? ஏன் உண்மைத்தன்மையை அவர்கள் விசாரிக்கவில்லை.
திமுக கோயில் நிலத்தையோ, அரசு நிலத்தையோ யாருக்கும் பதிவு செய்து தரவில்லை; ஆனால் தற்போது கோயில் நிலத்தை , இன்னொருவருக்கு பதிவு செய்து கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்படி எங்களை கேள்வி கேட்க முடியும். பழநி விவகாரம் குறித்து சிபிசிஐடி தற்போது விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை.
முதல்வர் விஜய் கோட்டு சூட்டு எல்லாம் போட்டுவிட்டு, 2 மாதங்களில் ஊழலை ஒழித்துவிட்டேன் என வீரவசனம் பேசுவது சரியில்லை. அவரின் முதுகுக்கு பின்னாலே ஊழல் புரையோடிக் கிடக்கிறது. முதல்வர் ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை.
கடந்த ஆட்சியில் ஏதோ ஒரு பிரச்சினை நடந்தால், முதல்வர் விஜய், ‘சி.எம் சார்...’ என ஓடி வருவார். இப்போது எங்கே போனார். முதல்வர் விஜய்க்கு தெரிந்துதான் இந்த நிலம் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்றால் முதல்வர் விஜய் வந்து சொல்லட்டுமே.” என்று தெரிவித்துள்ளார்.