

சென்னை: ‘முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, தமிழக அரசின் செயல்பாடுகளை 'துக்ளக் தர்பார்' என விமர்சித்துள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்றைய தினம் அதிகார ஆணவத் திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழக காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில், சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக தவெக அரசு பின்வாங்கியுள்ளது.
அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்?
முதல்வர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?
ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இணையாக தமிழகத்தை ஆளும் தவெக அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
தவெக அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?’ என்று திமுக விமர்சித்துள்ளது.