

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் திமுக மாணவர் அணி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் திமுக மாணவர் அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் முதலாண்டு சேர உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், சென்னை அறிவாலயத்தில் திமுக மாணவர் அணி சார்பில் சிறப்பு உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
உயர்கல்வி தொடர்பாக மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகளை தாமதமின்றி வழங்குமாறு மையத்தின் பொறுப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், டிஆர்பி. ராஜா, ஆ.ராசா எம்.பி. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்களிடம் திமுக மாணவர் அணிச் செயலாளர் வீரமணி கூறியபோது, “பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு உதவி மையம் மூலம் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணியில் மாணவர் அணியைச் சேர்ந்த 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.