

கோப்புப் படம்
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் திமுகவுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அங்கு கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளாக 14 பேர் உள்ள நிலையில், அவர்கள் கூட திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதால் கட்சியினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.துரைராஜ், அதிமுக சார்பில் ஆர்.மனோகரன், தவெக சார்பில் ரமேஷ் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தவெக வேட்பாளர் ரமேஷ் 1,03,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக துரைராஜ் 69,645 வாக்குகளும், அதிமுக மனோகரன் 65,819 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், இந்தத் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியானது. இதில், ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91-வது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளருக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு அதிமுகவுக்கு 236 வாக்குகளும், தவெகவுக்கு 51 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதேபோல, 87-வது வாக்குச் சாவடியில் திமுகவுக்கு 42 வாக்குகளும் 93-வது வாக்குச்சாவடியில் 41 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, “திமுகவில் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திமுகவுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளே வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கட்சி தலைமை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணியிடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார்.