

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “சுற்றுப்பயணத்தில் பொதுமக்களிடையே இருந்து வரும் ஆதரவு நன்றாக இருக்கிறது. ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியை திமுக நடத்துகிறது. தமிழகத்தில் இந்த ஆட்சி இருக்கக் கூடாது.
இந்த அடிப்படையில் ஒருங்கிணைந்து யார் வந்தாலும் அவர்களை வரவேற்கிறேன். உள்ளாட்சித் துறையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வருகின்றன. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மழை பாதிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்கும் நடவடிக்கையை தற்போது எடுத்து வருகின்றனர். மக்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் திமுக அரசு எடுத்ததாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
‘விஜயுடன் கூட்டணி உண்டா?’ என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கக் கூடாது என நினைக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.