

சென்னை: திமுகவில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு கட்சிப் பணிகளில் வாய்ப்பளிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. குறிப்பாக, முதல்வராக இருந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூரில் தோல்வியைத் தழுவியது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு சமீபத்தில் விரிவான அறிக்கையை தலைமையிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கள ஆய்வுக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி கட்சிக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது.
தற்போது திமுகவில் 78 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஒருசிலர் தங்கள் கட்டுப்பாட்டில் 4 முதல் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை வைத்துள்ளனர். இதனால் கட்சிக்குள் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே 2 அல்லது 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 110-க்கும் மேல் உயர்த்த தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அதேபோல், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 3 முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருந்த எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 23 பேர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக 40-க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. அதில் இளைஞரணி, மகளிரணிக்கு முக்கியத் துவம் வழங்கப்படவுள்ளது.
குறுநில மன்னர்களாக... ஒரு மாவட்டச் செயலாளர் பல தொகுதிகளில் கவனம் செலுத்துவது சாத்தியமில்லை. மேலும், ஒருவரிடமே அதிகாரம் குவியும்போது, அவர்கள் குறுநில மன்னர்கள் போலச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுள்ளது. இதையெல்லாம் தவிர்க்கவே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், அதிக தொகுதி களை வைத்திருக்கும் மூத்த மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து தொகுதிகளைப் பறித்து புதியவர்களுக்கு வழங்கும்போது, அவர்கள் அதிருப்தியடைய வாய்ப்புள்ளது. ஒருவேளை அதிருப்தியடையும் நிர்வாகிகளில் சிலர் கட்சியில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் இணைந்துவிட்டால், அது அரசியல் ரீதியாகப் பெரியதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாமதத்துக்கு காரணம்: எனவே, பொறுப்புகள் குறைக்கப்படும் மூத்த நிர்வாகிகளுக்கு கட்சி அமைப்பில் வேறு கூடுதல் பொறுப்புகளை வழங்கி அவர்களை சமாதானப்படுத்த வும் தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.