

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை 10-ம் தேதி கரூரில் பேசிய முதல்வர் விஜய்,இந்த துயர சம்பவத்துக்கு கரூர் காவல்துறையே முழு பொறுப்பு என்பது போலவும், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளார்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்னிலையிலேயே இந்த உரை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறைச் செயலாளர். டிஜிபி ஆகியோர் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர் ஆவணத்தில், ‘தவெக அமைப்பாளர்களின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே இந்த விபத்துக்கு காரணம்’ என்று பூர்வாங்க விசாரணையின் அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அதே உள்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர், அதற்கு முற்றிலும் முரணாக பொதுவெளியில் பேசிசாட்சிகளை திசைதிருப்ப முயல்கிறார். இவ்வழக்கில் தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை கைது செய்யப்படாததால், சாட்சிகளை சிதைக்கக் கூடாது என்ற நீதிமன்ற கட்டுப்பாடுகள் எதுவும் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை குறித்து சிபிஐ தனி புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்து, சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய பிணைப் பத்திரங்களை எழுதி வாங்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.