

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக திமுக எம்.பி வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமையை பெற்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஆள்காட்டி விரல்களில் தேர்தலில் வாக்கு அளித்ததற்காக வைக்கப்படும் மை இருந்ததை வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயிடம் இந்திய தேர்தல் ஆணையம் புகார் அளிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு விவரம்: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சுமார் 25 பேர் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
தவறான அல்லது போலி ஆவணங்கள் மூலம் தாங்கள் இந்திய குடிமக்கள் என்று காட்டிக்கொண்டு, எஸ்ஐஆர் மூலம் இவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்து, தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகள் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் நேரடியாகப் பாதிக்கிறது.
வாக்கெடுப்புக்கு முன்னும் பின்னும் நடைபெறும் குடியேற்றம் (Immigration), வெளியேற்றம் (Emigration) குறித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பிரிவிடம் உள்ளது.
எனவே, இந்த மிகப்பெரிய அளவிலான தேர்தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்பால் மட்டுமே விரிவான விசாரணையை மேற்கொள்ள முடியும்.
அதனால் இதுகுறித்து சிபிஐயிடம் தேர்தல் ஆணையம் புகார் அளித்து, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும்.
தேர்தலில் வாக்களித்த அந்த வெளிநாட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் வாக்களிப்பதை தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அதற்கான வலுவான ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் எம்.பி. வில்சன், தனது மற்றொரு எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.