

புதுச்சேரி: புதுச்சேரியில் பேரவைத்தலைவர் தேர்தல் நடத்தக் கோரியும், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அமைச்சர்களுக்கு இலாகா தர வலியுறுத்தியும் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. முதல்கட்டமாக மே 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியேற்றனர்.
ஒரு மாத இழுபறிக்கு பின் கடந்த ஜூன் 17-ம் தேதி மீதமுள்ள 3 அமைச்சர்கள் ராஜவேலு, சிவகொழுந்து, ரா ஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அமைச்சர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அரசு நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
பேரவைத் தலைவர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கு முக்கிய' இலாகாக்களை கேட்டு என்ஆர்.காங்கிரசுக்கு, பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், பேரவைத் தலைவர் பதவி யாருக்கு என்பது இழுபறியாக உள்ளது. இதனிடையே பேரவைத் தலைவர் தேர்தலை ஜூலை 2-ம் தேதி நடத்த ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்த கோப்புக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி தரவில்லை.
புதுவையில் முழுமையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவையை கூட்ட வேண்டியுள்ளது. பேரவைத் தலைவர் தேர்தல் தள்ளிப் போவதால் சட்டப்பேரவைக் கூட்டமும் நடத்த முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், பேரவைத்தலைவர் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் அமைச்சர்களுக்கு இலாகா தர வலியுறுத்தியும் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், செந்தில் ஆகியோர் கையில் கோரிக்கைகளுடன் வந்து கோஷமிட்டனர். சட்டப்பேரவை மைய மண்டபம் செல்லும் படிகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் சிறிய மாநிமான புதுச்சேரியில் மட்டும் இதுவரை சட்டமன்ற கூட்டத்தை கூட்டவில்லை. சபாநாயகர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பான அதிருப்தியை பலநிலைகளி்ல எடுத்துச் சொன்னோம்.
சபாநாயகரை நிரந்தரமாக நியமிக்கக் கோருவது எங்கள் உரிமை. சட்டப்பேரவை பாதுகாவலர் சபாநாயகர்தான்.மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாரந்தோறும் ஒருவர் என பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது டீக்கடை பிரச்சாரமாகியுள்ளது. அரசு தலையிட்டு நிரந்தர சபாநாயகரை நியமிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு முன்பே இது தொடர்பாக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆளுநர் இதை மறுக்கவில்லை. அதிகாரபூர்வமாக கோப்பு அனுப்பவில்லை என முதல்வரும் சொல்லவில்லை.
அமைச்சர்களுக்கு இலாகா தரப்படவில்லை. ஏற்கெனவே ஜான்குமார் இலாகா இல்லாமல் இருந்தார். எத்துறை அமைச்சர் என்றால் ‘ஆல் இன்ஆல் அழகுராஜா’ என்று சொல்லும் நிலை இருந்தது. அது தொடர்கிறது. சட்டப்பேரவையை கூட்டவேண்டும். அமைச்சர்களுக்கு இலாகா தரவேண்டும். சபாநாயகர் பதவி என்.ஆர்.காங்கிரஸுக்கா, பாஜகவுக்கா என்பதில் பிரச்சினை உள்ளது.
இவ்விஷயத்தில் முதல்வர் கேட்பதில் நியாயம் உள்ளது; அதிக இடத்தில் அவர் வென்றுள்ளார். குறைந்த இடத்தில் வென்று அப்பொறுப்பை பாஜக கேட்கிறார்கள். அது நியாயம் இல்லை அது அவர்கள் கட்சி முடிவு” என்றார்.