பூத் கமிட்டிக்கு ஆள் இல்லாத காங்கிரஸ்: போட்டுத் தாக்கிய திமுக மா.செ

பூத் கமிட்டிக்கு ஆள் இல்லாத காங்கிரஸ்: போட்டுத் தாக்கிய திமுக மா.செ
Updated on
2 min read

“நாங்கள் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்’’ என்று மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி தாக்கிப் பேசி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தை கடுகடுக்க வைத்திருக்கிறது.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கோ.தளபதி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் ஆளுநரை யாரும் பேசக்கூடாது, கத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், நானெல்லாம் முதல்வர் சத்தம் போட்டா போட்டுட்டு போகட்டும் என ஆளுநரை எதிர்த்து கத்திவிட்டேன்.

தமிழகத்தின் வரலாற்றையும், தமிழ் மொழி வரலாற்றையும் தெரியாத இப்படிபட்ட ஆளுநரை வைத்துக் கொண்டு என்ன செய்வது. எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் நல்லாதான் இருந்தார். அவரும் பாஜக-வுடன் சேரவில்லை. சேர்ந்தால் எப்படியும் நம்மை அமுக்கிவிடுவார்கள் என்று நினைத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி, அவர் மனதைக் கரைத்துவிட்டார்கள்.

சமீபத்தில் மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஒரு முறை கூட அதிமுக என்று குறிப்பிடவில்லை. பழனிசாமிதான் முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அதிமுக ஒருவேளை ஜெயித்து வந்தாலும், முதலமைச்சர் பதவியை பாஜக கைப்பற்றும். அப்படி மறைமுகமாக பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் திமுக-வுக்கு வாக்களிக்கச் சொல்கிறோம்.

எதற்கும் அஞ்சாத ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கிறார். யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் ஒய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிஸில் சிலர் இருக்கிறார்கள். அவர்களது பெயரைச் சொன்னாலும் தப்பில்லை.

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரைத்தான் சொல்கிறேன். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். அதனால் அவர்கள், இந்தத் தேர்தலில் எவன் எம்எல்ஏ ஆனா என்ன,ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இப்போது, அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இதை எல்லாம் தலைமை புரிந்து அடுத்த முறை அவர்களுக்கு சீட்டே கொடுக்க விடக்கூடாது. அதற்கு நம்மால் ஆன காரியங்களைச் செய்ய வேண்டும். நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நாம்உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம்.

இண்டியா கூட்டணியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூவர் தான் காரணம். காங்கிரஸுக்கு ஒரு தொகுதிக்கு மூவாயிரம், நாலாயிரம் ஓட்டு தான் இருக்கிறது. பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பதுதான் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தளபதியின் இந்தப் பேச்சுக்கு உடனடியாக தனது எக்ஸ் தளத்தில் எதிர்வினையாற்றிய மாணிக்கம் தாகூர், ‘இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் (தளபதியின் தொகுதி) காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அன்புத்தலைவர் கார்கேயிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமைக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது’ எனத் தெரிவித்திருந்தார்.

பூத் கமிட்டிக்கு ஆள் இல்லாத காங்கிரஸ்: போட்டுத் தாக்கிய திமுக மா.செ
“வந்ததுமே சிஎம் சீட் வேணும்னா எப்படி?” - விஜய்க்கு தமிழிசை கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in