

திருநெல்வேலி / மதுரை: தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதேபோல் 2023-ல் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 20-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ஜாமீன் வழங்கியது.
இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு திமுகவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டதால்தான் எனது வார்த்தைகள் கடுமையாக இருந்தன. முதல்வர் குறித்துஅதிகமாக பேசக்கூடாது எனக் கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் பங்கேற்கத்தான் எனக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டம் தொடர்வோம். இவ்வாறு கூறினார்.
வழக்கு மாற்றம்: இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கடந்த 2023 ஜன.6-ல் நடந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி காரணம் என்று பேசியதோடு, தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார்.
இவர்மீது நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அரசுத் தரப்பு வாதத்தை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.