

சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்த குற்றச்சாட்டால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதம் நேற்று நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக): திமுக தலைவர் குடும்பத்தின் உறவினர் ஒருவர்தான் வன்னியர் 10.5 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் இடையூறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
திமுக கொறடா எ.வ.வேலு: சட்டப் பாதுகாப்போடு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் திமுகவின் அழுத்தமான முடிவு.
சி.வி.சண்முகம் (அதிமுக): வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை தரக்கூடாது என்று நான் குறிப்பிட்டவர் பெயரில்தான், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, வெற்றி பெறப்பட்டது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி: அதிமுக ஆட்சிக்காலத்தில் 10.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், 2021 ஆட்சி மாற்றத்துக்குபின், அந்த அரசு காலஅவகாசத்தை நீட்டிக்கவில்லை. அப்படி செய்திருந்தால், வன்னியருக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
மெய்யநாதன் (திமுக): தலைவர் குடும்பத்தைச் சார்ந்தவர் வழக்கு போட்டதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை சொல்கிறார்கள். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தருவதில் முதல் களப் போராளியாக இருந்தது திமுக
கணேஷ்குமார் (பாமக): சாதிவாரி கணக்கெடுப்புக்கும் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் சம்பந்தம் இல்லை. உச்ச நீதிமன்றம் கேட்கும் தரவுகளை மாநில அரசு வழங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சி.வி.சண்முகம்: திமுக முன்னாள் அமைச்சர் கூறுவது சரி. எனவே, நான் சொன்ன குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.