

கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் தலைவர் தனது கணவருடன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் திமுகவினரிடம் மன்னிப்பு கோரி உருக்கமாக பேசினர்.
கிருஷ்ணகிரி திமுக முன்னாள் நகர செயலாளர் நவாப், தனது மனைவி முன்னாள் நகராட்சித் தலைவர் பரிதா நவாப் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து விலகி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நேற்று முன்தினம், அதிமுகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரிக்கு நேற்று திரும்பிய நவாப், பரிதா நவாப் உள்ளிட்டோருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசும்போது, “கடந்த 40 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றிய போது, அதிமுகவை தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
உடன் பிறப்புகள் என நினைத்து துரோகிகளுடன் பயணித்து விட்டேன். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம். மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுவதே எங்களது லட்சியம்’ என்றனர்.
பின்னர் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர் அசோக் குமார் எம்எல்ஏ ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.