

கோவை: “கோவை மெட்ரோ ரயில் பிரச்சினையில் திமுக இரட்டை வேடமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறது” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவைக்கு வருகை புரிந்து இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றுள்ளார், அவருக்கு நன்றி. தற்போது திமுகவும் கூட்டணி கட்சிகளும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரதமருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் கூறுகின்றனர். மக்கள் தொகை, மெட்ரோ பயன்பாடு குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை மத்திய அரசிடம் வழங்கி இருக்க வேண்டும். மத்திய அரசு வரையறை என்பது தனிப்பட்ட மாநிலங்களுக்கானது அல்ல, பொதுவான திட்டமாகும்.
கோவை மெட்ரோ திட்டம் குறித்து தமிழக அரசு குறிப்பிட்டுள்ள பெரியகடை வீதி, நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக வணிக நிறுவனங்களை இடிக்க வேண்டிய வகையில் தகவல்களை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளனர். கோவை மக்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றி பெற செய்யாததால் கோவை மக்களை வஞ்சிப்பதற்காகவே செயல்படுத்த முடியாத திட்ட அறிக்கையை தமிழக அரசு, மத்திய அரசிடம் கொடுத்துள்ளது.
கோவை மெட்ரோ திட்டம் குறித்து தமிழக அரசு குறிப்பிட்டுள்ள பெரியகடை வீதி, நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக வணிக நிறுவனங்களை இடிக்க வேண்டிய வகையில் தகவல்களை மத்திய அரசிற்கு வழங்கியுள்ளனர். கோவை மக்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றி பெற செய்யாததால் கோவை மக்களை வஞ்சிப்பதற்காகவே செயல்படுத்த முடியாத திட்ட அறிக்கையை தமிழக அரசு, மத்திய அரசிடம் கொடுத்துள்ளது.
ஆக்ரா, பாட்னா, போபால் போன்ற மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களில் பல்வேறு காரணங்களை முன்வைத்து, உதாரணமாக ஆக்ரா என்றால் சுற்றுலாவை மையப்படுத்தியது போன்று ஒவ்வொரு நகரத்திற்கும் உரிய காரணங்களை ஆவணங்களுடன் தெரிவித்து ஒப்புதல் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு கேட்ட விளக்கங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கோவை மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுத்த முடியாத அறிக்கையை தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கோவைக்கு மெட்ரோ திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளது என கேட்கும் பலருக்கு, அதிக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள், அதிக மருத்துவ கல்லூரிகள், ராணுவ தளவாட உற்பத்தி மையம் உள்ளிட்ட சாலை, ரயில் சேவை, ஏழை மக்களுக்கு வீடு, திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினல் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
கோவைக்கு வந்த பிரதமரை, முதல்வர் வந்து பார்வையிட்டிருக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் ‘மெட்ரோ’ ரயில் விவகாரத்தில் திமுக இரட்டை வேடமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ‘டாஸ்மாக்’ பிரச்சினை ஏற்பட்ட போது தமிழக முதல்வர் டெல்லிக்கு ஏன் சென்றார். திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று என்ன பயன்? மெட்ரோ திட்டம் தொடர்பாக எம்எல்ஏ-வான என்னிடம் கருத்து கேட்கவில்லை. சட்டப்பேரவையில் நான் ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவுவதாக சட்டப்பேரவையில் தெரிவித்தேன். இருந்தபோதும் என்னிடம் எந்த கருத்தும் தமிழக அரசு கேட்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.