

சென்னை: காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் திமுக இல்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். எங்கள் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டதால், அவை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். அதன் அடிப்படையில் சண்முகம் அவ்வாறு சொல்லியிருக்கலாம்.
ஒரு கட்சி எடுக்கக் கூடிய முடிவுகளை நாம் விமர்சிக்கக் கூடாது என திமுக தலைவரே சொல்லியுள்ளார். அது அந்தந்த கட்சியின் உரிமை. பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி கண்டிப்பாக வலிமையான கூட்டணியாக மறுபடியும் உருவாகும். காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் திமுக இல்லை. திமுகவை தேர்தல் வெற்றி, தோல்விகள் அசைத்துவிட முடியாது.
கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகள், தோல்விகளை நாங்கள் சந்தித்துள்ளோம். கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. அந்த கொள்கையில் தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெறும்போது கொள்கைகளை செயல்படுத்துவோம். வெற்றி பெறாவிட்டால் ஆட்சியில் இருப்பவர்கள் அந்த கொள்கையை செயல்படுத்த அழுத்தம் தந்து போராடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.