“ரூ.5,000 கொடுத்த திமிரில் திமுக, ஆனால் பெண்களோ...” - தமிழிசை ஆவேசம்

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

Updated on
1 min read

திருநெல்வேலி: “தமிழகத்தில் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டதாக திமுக திமிரில் உள்ளது. ஆனால் பெண்கள் திமிறி எழுந்து இந்த ஆட்சியை அகற்ற உள்ளனர்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக தெரிவித்தார்.

திருநெல்வேலியில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விளாத்திகுளம் சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அங்கு போராட்டம் நடத்திய மக்களிடம் காவல் துறையினர் கிண்டல் கேலி பேசி உள்ளனர்.

தமிழகத்தில் எதுவுமே நடைபெறவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் அது குறித்து கவலைப்படாமல் மு.க.ஸ்டாலின் ரீல்ஸ் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். முதல்வரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஸ்டாலின் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகத்தில் 59 சதவீதம் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது. 129 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் 10 சதவீதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. யார் அந்த சார் என்ற கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் 8,690 கொலைகள் நடந்துள்ளன. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் இயற்கை உபாதை கழிக்கக் கூட செல்ல முடியாத நிலை இருந்து வருவது வேதனை அளிக்கிறது. ரூ.5 ஆயிரம் பெண்களுக்கு வழங்கி விட்டோம் என்ற திமிரில் திமுகவினர் உள்ளனர். ஆனால் பெண்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திமிறி எழுந்து வருகிறார்கள். ஸ்டாலின் அரசு இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். திமுக ஆட்சி 2.0 எல்லாம் வராது. பெண்கள் எங்கு பாதுகாப்பாக இல்லையோ அங்கு ஜீரோ தான் வரும். ஸ்டாலின் வீட்டுக்கு போவார்.

அப்பாவை வீட்டுக்கு அனுப்பி அம்மாவுடைய ஆட்சி வரும். குற்றம் செய்து விட்டவர்களை கண்டுபிடித்துவிட்டதாக திமுகவினர் சொல்கிறார்கள். குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க நிரந்தர டிஜிபி கூட நியமிக்கவில்லை. பிரதமர் தமிழக மக்கள் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் சொல்கிறார். ஆனால், அவர்களது குடும்பத்தில் யாருக்கும் தமிழ் பெயர் இல்லை.

கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதுவும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு டாஸ்மாக்கில் மட்டும்தான் பாஸ்மார்க் வாங்கி உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்கும். ஒரு வாரத்தில் அது வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்</p></div>
‘‘திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ - எடப்பாடி பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in