“தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது” - ஜெகத்ரட்சகன் எம்.பி பிரச்சாரம்

“தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது” - ஜெகத்ரட்சகன் எம்.பி பிரச்சாரம்

படம்: எம். சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரி: “சில கட்சிகள் தினமும் ஒரு கூட்டணிக்கு சென்றாலும் திமுகவுக்கு என்று வலுவான வாக்குகள் இருக்கிறது. அதை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளோம்” என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கொள்கை பரப்பு செயலர் எம்பி ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சேது செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வாக்கு சேகரிப்பை இன்று தொடங்கினார். அவருக்கு ஆதரவாக திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன், தலைமையில் புதுப்பேட்டை வார்டு மாரியம்மன் கோயில் வீதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதில், திமுக அமைப்பாளர் சிவா மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிடோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகத்ரட்சகன் எம்பி கூறியதாவது, “திமுகதான் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பலமான கட்சி. திமுக மிகப்பெரிய ஆலமரம் போன்றது. மற்றவர்கள் கூட்டணியில் சேர வந்தால் வரலாம்; அதற்காக திமுக மற்றவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தனித்து நிற்கிறோம்; தனித்துப் போட்டியிடுகிறோம். திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். தனித்து நின்று இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவோம்.

ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டணிப் பெயரை அறிவிக்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. புதுவை முதல்வர் ரங்கசாமி இத்தொகுதியில் 7 முறை வென்றுள்ளாரே என கேட்கிறீர்கள். அவரை எதிர்த்து எங்களின் வியூகம் என்ன என்பதை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம் புதுச்சேரியில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இடைத்தேர்தலில் அந்த மாற்றம் இருக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்க முடியவில்லை; பேரவைத் தலைவர் தேர்தல் கூட நடத்த முடியவில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் வியூகம் வகுத்து உள்ளோம். சில கட்சிகள் தினமும் ஒரு கூட்டணிக்குச் சென்றாலும் திமுகவுக்கு என்று வலுவான வாக்குகள் இருக்கிறது. அதை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளோம்.

இந்தத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால், புதுச்சேரி அரசில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். கூட்டணி இல்லாமல் திமுக களம் காண்பது புதிதல்ல. 1967-க்கு முன்பு கூட்டணிகள் இல்லாமல் தனித் தனியாகத்தான் தேர்தலில் போட்டியிட்டோம். கூட்டணி இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் தனித்து நின்று வெல்வோம். திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதை விரைவில் தெரிவிப்போம்” என்று அவர் கூறினார்.

“தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது” - ஜெகத்ரட்சகன் எம்.பி பிரச்சாரம்
மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in