“அதிமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது திமுக” - பழனிசாமி

“அதிமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது திமுக” - பழனிசாமி
Updated on
1 min read

கடையநல்லூர்: “அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளது திமுக. இன்று திமுகவில் ஆட்களே இல்லை. அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கே அவர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதிமுகவில் இருந்து சென்ற 19 பேருக்கு திமுகவில் வாய்ப்பு வழங்கியுள்ளனர்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில்தான் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கினோம். அதனால் மக்கள் அதிகம் பயனடைந்தனர். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளது திமுக.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்தோம்.

எங்களைப் பார்த்து காப்பியடித்த திமுக, ரூ.8 ஆயிரத்துக்கு கூப்பன் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஏனென்றால் கூப்பன் கொடுத்தால்தான் ஊழல் செய்ய முடியும். இந்த கூப்பனுக்கு டோக்கன் கொடுப்பார்கள், அதில் லஞ்சம், ஊழல் நடக்கும். ஆனால், அதிமுகவில் அப்படியல்ல. உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும்.

திமுகவில் இன்று ஆட்களே இல்லை. அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கே அவர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். நம்மால் தூக்கி எறியப்பட்டவர்களை அவர்கள் அமரவைத்துள்ளனர். அதிமுகவில் இருந்து சென்ற 19 பேருக்கு திமுகவில் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

எங்கள் கட்சியை உடைக்க ஸ்டாலின் பல முயற்சிகளை செய்தார். அதனையெல்லாம் தவிடுபொடியாக்கி இன்று களத்தில் நிற்கிறோம்.

தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும்தான் போட்டி என்கிறார் ஸ்டாலின். தேர்தல் தமிழகத்தில் நடக்கிறதா, டெல்லியில் தேர்தல் நடக்கிறதா? இதுகூட தெரியாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். இனியாவது திருத்திப் பேசுங்கள்.

அதிமுகவை குறைசொல்ல வழியே இல்லை என்பதால், தமிழகத்துக்கும் டெல்லிக்கும்தான் போட்டி என்கிறார். திமுகவுக்கு இதுதான் இறுதி தேர்தல்.

திமுக என்றால் கருணாநிதி குடும்பம். இப்படிப்பட்ட குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்.

தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை அதிகம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதற்கெல்லாம் அதிமுக ஆட்சியில் முடிவு கட்டப்படும்” என்று பழனிசாமி பேசினார்.

“அதிமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது திமுக” - பழனிசாமி
“இந்தத் தேர்தலோடு ஸ்டாலின் விடைபெறப் போகிறார்” - பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in