

ராம்குமார்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் சொத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார், முன்ஜாமீன் மனு விசாரணைக்காக மதுரை செல்லும்போது தனிப்படை போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம்குமார். திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளராக உள்ளார். இவர், ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள ரூ.50 கோடி மதிப்புடைய ரங்கநாதர் கோயில் சொத்தை அபகரித்தாக கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் திருச்சி மாநகர குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் ராம்குமார், இந்தச் சொத்து தன்னுடையது என்று போலியாக ஆவணங்கள் தயாரித்து ராம்குமாரிடம் ரூ.2 கோடியே 90 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பத்திரப் பதிவு செய்து கொடுத்த சென்னையை சேர்ந்த பத்மஜா, விஜயா, சவுந்தரராஜன், புதுச்சேரியை சேர்ந்த ரங்கவரதன், ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி ராம்குமார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையில் ஆஜராக இன்று காலை ராம்குமார் தனது காரில் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே அவரது கார் மற்றும் செருப்புகள் கிடந்த நிலையில், அவரை சிலர் கடத்தி சென்றதாக அவரது மனைவி ஆண்டாள் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் அவரை கைது செய்திருப்பதை உறுதி செய்தனர்.
முன்ஜாமீன் மனு விசாரணைக்கு மதுரை சென்ற ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.