“தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது”– ரங்கசாமிக்கு திமுக கண்டனம்

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா | கோப்புப் படம்

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா | கோப்புப் படம்

Updated on
2 min read

புதுச்சேரி: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா கூறுகையில், “தென் மாநில குழுவின் 31–வது மாநாடு சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அதில் தென் மாநிலங்களின் அனைத்து முதல்வர்களும் பங்கேற்று தங்கள் மாநிலத்தின் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்த நிலையில், நமது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் இந்த மாநாட்டையும் புறக்கணித்திருப்பது மாநிலத்திற்கு அவர் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

கடந்த காலங்களில் பிரதமர் தலைமையில் நடந்த நிதி அயோக் போன்ற மிக முக்கிய மாநாடுகளை புறக்கணித்து வந்தது போலவே இந்த மாநாட்டையும் புறக்கணித்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். இது மாநிலத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கும் செயலாகும். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்படுவேன் என்று அவர் பதவிப் பிரமாணம் எடுத்ததற்கு விரோதமான செயலாகும்.

கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக - என்.ஆர்.காங். இரட்டை இன்ஜின் ஆட்சியில் புதுச்சேரி பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வந்தது. மாநில அந்தஸ்து, விமான நிலைய விரிவாக்கம், கூடுதல் நிதி ஒதுக்கீடு, நீர்வளத் தேவைகள், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு என பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை இம்மாநாட்டில் முன்வைத்து தீர்வு காணும் நல்ல சந்தர்ப்பத்தை முதல்வரின் புறக்கணிப்பு நழுவவிட்டு உள்ளதை உணர முடிகிறது.

சமீபத்தில் புதுச்சேரி வந்த உள்துறை அமைச்சருடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் இவர்களுக்குள்ளான அதிகாரப் பகிர்வுக்கு தீர்வு காண முடியாத நிலையில் இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு இழுபறியில் உள்ள பொழுது எப்படி உள்துறை அமைச்சரை சந்திப்பது என்ற பயத்தில் மாநாட்டை புறக்கணித்தாரா ?. அல்லது தனக்கு போட்டியாக மாநில துணை நிலை ஆளுநர் பங்கேற்பதை பொறுத்துக் கொள்ளாமல் புறக்கணித்தாரா? என்பதை முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.

எது எப்படி இருந்தும் இவர்களின் போட்டி அரசியல் புதுச்சேரி மக்களின் வாழ்வையும், வளர்ச்சியையும் பாதிப்பதாக உள்ளதை யாரும் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் மாநில பிரச்சனைகளை மத்திய அரசிடம் நேரடியாக முன்வைத்து விவாதிக்க தைரியமில்லாமல் அஞ்சு ஓடி ஒளிவது ஏன்?. புதுச்சேரி மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவதில் முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதை அவரது புறக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்தால் அதன் மூலம் தனக்கு நிகராக ஆளுநருக்கு மாநாட்டில் இடம் தந்ததை கேள்விக்கு உள்ளாக்கி இருக்க முடியும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்கள் தங்கள் ஆளுநர் மூலம் பங்கேற்கலாமே தவிர சட்டமன்றமும், அமைச்சரவையும் உள்ள. யூனியன் பிரதேச ஆளுநர்கள் பங்கேற்பதை தடுத்திருக்க முடியும். மக்கள் பிரச்சினையும் பேசாமல், ஆளுநரின் அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்காமல் ஓடி ஒளிவதும், மவுனம் காப்பதும் ஒரு முதல்வருக்கு அழகல்ல. இது மிகப் பெரிய கோழைத்தனமும், புதுச்சேரி மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகமும் ஆகும்” என்று சிவா தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p><em>புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா | கோப்புப் படம்</em></p></div>
தஞ்சை: சர்வர் பிரச்சினையால் செயல்படாத இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்த ரேஷன் கடை பணியாளர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in