

சென்னை: டிஜிபி நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறக்கூடாது. தமிழகத்தில் நிரந்தர டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்தது சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஏப்.2-ம் தேதி சந்தீப் ராய் ரத்தோரை நிரந்தர டிஜிபியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.
முதலில் போலீஸ் படைக்கான தலைமை அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. உச்ச நீதிமன்றத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, மாநில அரசு அனுப்பும் 3 அதிகாரிகள் பட்டியலில் இருந்துதான் டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், தேர்தல் ஆணையம் ஓர் அதிகாரியை டிஜிபியாக நியமிப்பதாக இருந்தால், தேர்தல் முடியும் வரை அவரை ‘பொறுப்பு’ டிஜிபியாக மட்டுமே நியமிக்க முடியும்.
மேற்கு வங்காளம் உள்ளிட்ட இதர மாநிலங்களில் தேர்தல் ஆணையம் அவ்வாறுதான் பொறுப்பு அதிகாரிகளை நியமித்து இருக்கிறது.
பாரபட்சமான நடவடிக்கை
ஆனால், தமிழகத்தில் மட்டும் சந்தீப் ராய் ரத்தோரை நிரந்தர டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. இது சட்டப்படி செல்லாது. இது தமிழகத்தை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பாரபட்சமான நடவடிக்கை.
எந்த சூழலிலும் தேர்தல் ஆணையம் நிரந்தர டிஜிபியை நியமிக்கவே முடியாது. நிரந்தர டிஜிபி நியமனப் பணிகள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கொள்ளப்படும்.
எனவே, சந்தீப் ராய் ரத்தோரை நிரந்தர டிஜிபியாக நியமித்து ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தேர்தல் ஆணையம் திருத்தம் வெளியிட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறாமல் இருக்கும் வகையிலும், சட்ட சிக்கல்களைத் தவிர்க்கும் வகையிலும், சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் முடியும் வரை பொறுப்பு டிஜிபியாக மட்டுமே இருப்பார் என்பதை அதில் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.