

மஞ்சம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம்.
மாதவரம்: மாதவரம் தொகுதியில் திமுக சார்பில் ஏற்கெனவே இருமுறை வெற்றி பெற்ற எஸ்.சுதர்சனம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான வி.மூர்த்தி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.
திமுக வேட்பாளரான எஸ்.சுதர்சனம் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க, தொகுதி முழுவதும் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மாதவரம் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்றதும் உரிமைத் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும், எனக்கூறி பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.
கூட்டணி கட்சியினர் புடைசூழ மாதவரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, சென்னை மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேடு, மஞ்சம்பாக்கம், மாத்தூர் எம்எம்டிஏ, மணலி, மாதவரம் பஜார், மாதவரம் பால் பண்ணை, புழல், காவாங்கரை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் சுதர்சனத்துக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.
மஞ்சம்பாக்கம் பகுதியில் வீரவேல் பரிசாக அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் உங்களில் ஒருவனாக உங்களுடன் இருந்துள்ளேன். அந்த உரிமையுடன் உங்களிடம் நேரடியாக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
எதிரணியினர் என்னைப்பற்றி எவ்வளவு அவதூறு பரப்பினாலும், மாதவரத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நிறைவேற்றி்க் கொடுத்துள்ள திட்டங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
10 ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காமல் தொகுதி மக்களின் கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி என அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி உள்ளேன். மாதவரம், செங்குன்றத்தில் பேருந்து நிலையங்களையும், பள்ளிக்கூடங்களையும் ஹை-டெக்காக மாற்றிக் கொடுத்துள்ளேன்.
மாதவரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் எஸ்.மூர்த்தி.
பாடியநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. என்னை 3-வது முறையாக வெற்றி பெற வைத்ததும் முதல் திட்டமாக மாதவரம் பால் பண்ணை பகுதியில் ‘டைடல் பார்க்’ கொண்டு வருவேன். இதன்மூலம் குறைந்தது 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்து தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக்காட்டுவேன்.
ஆவின் பால் பண்ணையை மேம்படுத்தி மகளிருக்கான தொழில் வாய்ப்பை அதிகரிப்பேன். மாதவரம், அம்பத்தூர், பொன்னேரி விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடைத்திட்டம் மற்றும் குடிநீர் வசதிகளை செய்து கொடுப்பேன். தொகுதி மக்கள் எந்த நேரமும் என்னை எளிதாக அணுகலாம், என்றார்.
திமுகவுக்கு போட்டியாக வீதி, வீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக வேட்பாளரான மாதவரம் எஸ்.மூர்த்தி, என்னை மீண்டும் வெற்றி பெற வைத்தால் தொகுதியின் சாலை கட்டமைப்பை மாற்றுவேன். அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவேன். தெருவோர வியாபாரிகளுக்கு இலவச கடைகளை கட்டிக்கொடுப்பேன்.
கழிவுநீர் மேலாண்மை திட்டத்தையும், குடிநீர் பற்றாக்குறையையும் தீர்ப்பேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தவெக வேட்பாளரான எம்.எல்.விஜய்பிரபுவும், நாதக வேட்பாளரான கிருத்திகா ஏழுமலையும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால், மாதவரத்தில் திரும்பும் திசையெல்லாம் வேட்பாளர்களின் போட்டி பிரசாரத்தால் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.