

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியை கேட்டுப் பெற திமுக, அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், இந்த முறையும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதோ என திமுக, அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல்மாதம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தலைநகரான பிறகு நடைபெறும் 2-வது தேர்தலாக இது உள்ளது. இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி(தனி), பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றின் மாவட்டச் செயலாளர்களும் பூம்புகார் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தத் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை.
சீர்காழி தனி தொகுதியாக இருப்பதால், ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் திமுகவே அங்கு போட்டியிடும்.
ஆனால், மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கியுள்ளன.
இதில், 1989-க்குப் பிறகு 1991-ல் காங்கிரஸ், 1996-ல் தமாகா, 2001-ல் பாஜக, 2006-ல் காங்கிரஸ், 2011-ல் தேமுதிக, 2021-ல் காங்கிரஸ் என திமுக, அதிமுகவின் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. 2016-ல் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
எனவே, இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கிவிடுவார்களோ என திமுக, அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். மயிலாடுதுறை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான ராஜகுமார் மீண்டும் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்.
அதேபோல, திமுக கூட்டணியில் தற்போது மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளும் இங்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், திமுகவிடம் தேமுதிக கொடுத்துள்ள விருப்ப பட்டியலில் இந்தத் தொகுதியும் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, மநீம திருச்சி மண்டல பொறுப்பாளரான ரவிச்சந்திரன் இந்த தொகுதியை தங்கள் கட்சிக்கு கேட்டுப்பெற வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த முறையும் தொகுதி தங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என எதிர்பார்ப்பில் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.
அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகளும் இத்தொகுதியை கேட்டுப் பெற ஆர்வம்காட்டி வருகின்றன. இதனால், அதிமுக தலைமை, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை தாரைவார்த்துவிடுமோ என அதிமுகவினரும் கலக்கத்தில் உள்ளனர்.