

சென்னை: “தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொளத்தூர் தொகுதியில் கடந்த 3 முறை இருந்ததைவிட அதிகளவிலான ஆதரவை இப்போது கண்கூடாகப் பார்க்கிறேன். நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்திருக்கிறது. இம்முறை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் நான்காவது முறையாகவும் கொளத்தூர் மக்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள். தமிழகம் முழுவதும் எங்கள் பிரச்சாரம் எப்போதும் போல் வலுவாக இருக்கும்” என்றார்.
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாதக சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2011-ம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.